Wednesday 23 November 2011

எங்களுக்காக நீங்கள்...!!!

அன்பான உறவுகளே....!
எமதருமை நண்பர்களே...!!
எங்கிருக்கிறீர்கள்...?
எவரையும் காணவில்லை..?
சிங்களவனின் சிரிப்பொலி மட்டுமே
எம்மைச் சுற்றி...!
என்ன ஆயிற்று...?
எப்படி இதெல்லாம்..?
இன்றாவது நீங்கள் வருவீர்கள் என்று
நாமிங்கே தவமிருக்கிறோம்...!

உங்கள் மலர்களுக்காக...
உங்கள் நெய்விளக்கிற்காக...
உங்கள் அன்பான அரவணைப்பிற்காக...
இதற்கும் மேலாக..
அன்பு அண்ணனின் உரைக்காக...
காத்திருக்கிறோம் உறவுகளே...!

ஒன்று மட்டும் உணர்கிறோம்..
ஏதோ நடந்து விட்டது...!
எம்மைச் சுற்றி பற்றைகள்..
எம்மைச் சுற்றி எதிரியின் சலசலப்பு..
அடிக்கடி எம்மைப் பார்க்கும் உறவில்லை
அடிக்கடி வந்து அழும் ஆத்ம நண்பர்கள் இல்லை
எம்மைக் கவனிக்கும் பொறுப்பாளர் இல்லை
மின் விளக்கு இல்லை...
தமிழர் வாழ்வு போல் நாமும் இருளுக்குள்..!

புரிந்து கொண்டோம்...
எம்மிடம் வரும் நிலையில் நீவிர் இல்லை
அதேநேரம்
எம்மை மறந்தும் விடவில்லை..!
எப்படி மறப்பீர்கள்...
தாயகம் வரும்வரை ஓயோம் என
கல்லறை மீது கைகள் வைத்து
சத்தியமல்லவா செய்தீர்கள்...!
எமக்குத் தெரியும்...
நாம் விட்ட இடத்தில் இருந்து
நீங்கள் தொடர்வீர்கள்.

நிலைகள் மாறலாம்...இலக்கிற்கான
பாதைகள் மாறலாம்...பெறுவதற்கான
வடிவங்கள் மாறலாம்...என்றுமே
இலட்சியங்கள் மாறக்கூடாது..!

ஒரு கணம் சிந்தியுங்கள்...!
உங்களுக்காய்....உங்களுக்காகவே
எங்கள் முப்பதினாயிரம் உயிர் தந்தோம்.
செங்களத்தில் நண்பர்கள்
அங்கங்கள் இழந்தனர்...!!
அப்பாவி மக்கள் அரிய உயிரை ஈந்தனர்..!!!
எல்லாமும் உங்களுக்காகவே...!!!

ஒருகணம் கூட ஓயவேண்டாம்
மறுகணம் எதிரி மாய்த்துவிடுவான்
ஊர் உலகெல்லாம் உரத்து
குரல் கொடுங்கள்...!
ஒவ்வொரு கணமும் இந்தக்
கல்லறை உறவுகளை நினையுங்கள்..!!

காலத்தின் கட்டளை எதுவோ
அதனை தொடருங்கள்...!
காலம் தரும் ஆயுதத்தை
கையில் எடுங்கள்...!!
இறுதி வரை இலட்சியத்திற்காக
போராடுங்கள்...!!
ஆண்ட இனம்....மலர்ச்சியாய்
வாழ்ந்த இனம்...மீண்டும்
மானத்தோடு வாழவேண்டும்

சிங்களவன் காலில்தான்
எமது வாழ்வு என்றால் - ஏன்
இத்தனை இழப்புகள்...!
எம்மை அவன் வென்றதாய்
சரித்திரம் இல்லை
இம்முறையும் அவ்வாறே
இருக்க வேண்டும்..!

கல்லறைகளுக்கு நாளை வாருங்கள்
கனிவான வெற்றிச்செய்தியோடு வாருங்கள்
காத்திருப்போம்..!
களத்தில் வெற்றிகளுக்காக...
எல்லையில் எதிரிகளுக்காக
காத்திருந்த எமக்கு இது பெரிதல்ல..!

தாயகக் கனவோடு நாங்கள்
சாவினைத் தழுவினோம்
தாயகம் வரும் வரை நீங்கள்
தளராது போராடுங்கள்.!
எங்கள் நினைவுகள்
எங்கள் பலங்கள்
எப்போதும் உங்களுடன்..!
நாங்கள் காத்திருப்போம்
நீங்கள் களமிறங்குங்கள்
வெற்றி பெற்றோம் என்று
மாலையோடு வாருங்கள்
நெய் விளக்கேற்றுங்கள்
கல்லறை கீதம் இசையுங்கள்...!

எம் இனமே எம் சனமே...
நாம் சொல்வது புரிகிறதா?
வெல்வோம்! வாழ்வோம்!!
வரலாறு படைப்போம்.!
தமிழரின் தாகம்
தமிழீழத் தாயகம்...!!

Monday 4 July 2011

உயிர்க்கொடையாளர்..!!

மனதார போற்றுவோம்.....!

காற்றோடு காற்றாகி
கலந்து போனவர்கள்!
        கடலென்ன தரையென்ன
        காவியங்கள் படைத்தவர்கள்!
விடுதலை வேள்விக்காய் தம்மை
விறகாய் எரித்தவர்கள்!
        வீறு கொண்டு தமிழினம் எழ
        வெடியாய் வெடித்தவர்கள்!
சாகும் தேதி தெரிந்தும்
சலனமின்றி திரிந்தவர்கள்!
        கணப்பொழுதும் பிரியாமல்
        கந்தகத்துள் வாழ்ந்தவர்கள்!
வாழத்துடிக்கும் தமிழினத்திற்கு புது
வரலாறு வகுத்தவர்கள்!
        சாவு என்ற ஏட்டிற்கு புது
        சரித்திரம் சேர்த்தவர்கள்!
மாற்றானின் பலத்தையெல்லாம்
மண்ணுக்குள் புதைத்தவர்கள்!
        எச்சமின்றி எதிரியை அழிக்க
        எரிமலையாய் பொங்கியவர்கள்!
பூவாய் வாழ்ந்து
புயலாய் எழுந்தவர்கள்!
        புன்முறுவலோடு புறப்பட்டு
        பூகம்பமாய் வெடித்தவர்கள்!
மண்ணுக்கான மரணம் என
மகிழ்வாய் ஏற்றவர்கள்!
        தலைவன் சொல்லே வேதமென
        தற்கொடையாளர் ஆகினர்!

-வார்த்தைகளுக்கள் வந்து அமர்ந்து விட முடியாத வாழ்க்கைதான் கரும்புலிகள் வாழ்க்கை. அந்த புனித தெய்வங்களின் நினைவாக எழுதியது இது. எவருமே நினைத்து பார்க்க முடியாத வீரம், சாவை தாமே சென்று அணைக்கும் அற்புதம். உத்தம வீர புருஷரை உள்ளத்தில் இருத்தி உளமார போற்றுவோம்!-

Sunday 1 May 2011

ஏப்ரல் மாதம்

ஏப்ரல் மாதம் என்பது ஈழத்தமிழர்களின் வீரத்திற்கு சவாலான மாதம். 2000 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விடுதலைப் புலிகளின் கைகளில் ஆனையிறவு வீழ்ந்தது.

2001 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அதே ஆனையிறவைக் கைப்பற்றுவதற்காக “அக்னிகீல” என்ற இராணுவ நடவடிக்கையைத் தொடங்கி முகமாலையில் மூக்குடைபட்டது சிறீலங்கா அரசு. இதன் மூலம் மரபு வழிச்சமரில் விடுதலைப் புலிகள் பலம் வாய்ந்த ஒரு அமைப்பினர் என உலகம் தனது கவனத்தை ஈழத்தின் மீது திருப்பினர்.

2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆனந்தபுரத்தில் ஒரு தந்திரோபாயத்தோடு நின்ற விடுதலைப் புலிகளை பல நாடுகளின் உதவியோடு சிறிலங்கா இராணுவம் தாக்கியது. நச்சு மற்றும் எரி வாயுவை பிரயோகித்தது. இந்தத் தாக்குதலில் தமிழ்மக்களின் வீரமறவர்கள் எனப் போற்றப்பட்ட பல தளபதிகள் வீரமரணம் அடைந்தார்கள்.

Saturday 30 April 2011

உலக தொழிலாளர் தினம்

உழைக்கும் கரங்கள் உரிமை வேண்டி முழக்கமிட்ட நாள். உழைப்பாளிகளின் குரல்கள் நசுக்கப்பட்ட காலத்தில் அதனை எதிர்த்து ஒன்று பட்டு கரம் கோர்த்து போராடிய மகத்தான நாள் இது. ஆனால் அந்த உழைப்பாளிகளை முட்டாளாக்கி இன்று இந்த “மே தினம்” என்பது அரசியல் கட்சிகளின் பிரசார கூட்டமாகி முழுமையான அரசியல் மயமாகியுள்ளது. இது மாறுமா என்று தெரியாது. ஆனால் மாறவேண்டும். 

Saturday 16 April 2011

முதன் முதலாய்...!

வணக்கம் நண்பர்களே!

காலத்தின் கோலத்தில் சிக்குண்டு சிதறுண்டு சின்னாபின்னப் பட்டுப் போனாலும் நினைவுகளின் நிழலில் நின்று இன்னமும் வாழ்வை ஓட்டிக்கொண்டு இருக்கும் உங்களைப் போல நானும் ஒருவன். எனது எண்ணங்கள் இங்கே வார்த்தைகளாக....!!

நன்றி.

என்றும் உங்கள்
வாகுகன்